கலந்துரையாடலின் தொடர்ச்சி
(திருக்குர்ஆன் 2:30)
மேல் தரப்பட்டுள்ள திருக்குர்ஆன் வசனம் மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத சர்வ வல்லமை மிக்க சக்திக்கும் அதன் படைப்பான உணர்ச்சிகளற்ற, சொந்தமான முடிவெடுக்கத்தெரியாத (குர்ஆன்-2:32) அடுத்த சக்திக்கும் இடையேயான ஏதோ ஒரு வடிவிலான கருத்து வெளிப்பாடுகள். இவ்வசனத்தினுள் புதைந்திருக்கும் செய்திகளை வெளியாக்க பலபக்க கட்டுரையொன்றே வரையப்பட வேண்டியுள்ளது . அந்தளவு மனிதப்படைப்பின் இரகசியத்தை சுமந்திருக்கும் இறை வசனம் இது. இவ்வசனத்தையே "தஜ்ஜால்" என்ற புனை பெயரில் வந்திருக்கும் அன்பர் குதர்க்கமாக இங்குமுன்வைத்துள்ளார். கீழே அவரது வாதங்கள் எந்தவொரு எழுத்தும் குறைக்கப்படாது மீண்டும் இப்பக்கத்தில் பதியப்பட்டுள்ளது. அவ்வாதங்களை விளங்கிக்கொள்ள ஏதுவாக பகுதி பகுதியாக இலக்கமிட்டு பிரிக்கப்பட்டுமுள்ளது. மேலும் அவர்முன் வைத்த வாதங்கள் மங்கள் நிற எழுத்துக்களால் அடையாளப்படுத்தப்பட்டு அவைகளுக்கான எனது விளக்கம் கருப்பு நிற எழுத்துகளால் தரப்பட்டுள்ளது.
இங்கு தஜ்ஜால் கற்பனையில் மிதந்திருப்பதை அவரது எழுத்துகள் உறுதி செய்கின்றன. அவரது ஊகம் போன்று அலங்காரமிக்க அரசவையில் மன்னர்களுக்கும், மந்திரிகளுக்குமிடையில் நடந்த உரையாடலள்ள இவைகள். மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத சர்வ வல்லமை மிக்க சக்திக்கும் அதன் படைப்பான உணர்ச்சிகளற்ற, சொந்தமான முடிவெடுக்கத்தெரியாத (குர்ஆன்-2:32) அடுத்த சக்திக்கும் இடையேயான ஏதோ ஒரு வடிவிலான கருத்து வெளிப்பாடுகள். இதற்கு மேல் கற்பனை செய்யுமளவு தகவல்களை அல்லாஹ் எமக்குத்தரவில்லை.
இதனை உதாரணங்கள் கொண்டு நான் விளக்க முற்படுவதன் மூலம் மட்டுப்படுத்தியுள்ள எமது சிந்தனையை "இவ்வாறும் சிந்திக்க முடியும்" என்று தட்டி யெழுப்ப முனைகிறேனே தவிர முடிவைத்தரவோ, ஒப்பு நோக்கிப்பார்க்கவோ கூறவில்லை என்பதை உணர வேண்டும்.
எம் கண் முன்னுள்ள மனிதனின் படைப்பான calculator ஐ முதலில் உதாரணத்துக் கெடுப்போம். அதற்குள் நடைபெறும் துவித எண் வடிவிலான (Yes, No) உரையாடலே துல்லியமான விடைகளை எமக்கு தர துணை புரிகிறது. சிந்தனைக்கு எட்டக்கூடிய, கண்ணுக்கு புலப்படக்கூடிய மனித படைப்பிற்குள் இடம்பெறும் இவ்வாறான உரையாடலே எமது அறிவிற்குள் நுழைய மறுக்கின்றபோது, எமது அறிவினால் யூகிக்க முடியாத எம்மை படைத்தவனது உரையாடலை எமது அறிவிற்குள் கொண்டு வர முனைகின்ற போது இவ்வாறான முட்டாள்த்தனமான கேள்விகள் தோன்ற வாய்ப்புகள் உண்டே. இனி அவரது வாதங்களை நோக்குவோம்.
01.
எல்லாம் அவன் செயல்?
தேடுதலின் பொழுது கிடைத்தவைகள் முழுவதும் என் சுயஅறிவில் நான் கண்டவைகள் எனவே இதனால் ஏற்படும் விளைவுகள் நன்மை/தீமைகள் என்னை மட்டுமே சேர வேண்டும்.… towards origin என்ற என்னுடைய தொகுப்பிலிருந்து …
இறைவன் வானவர்களுடன் நிகழ்த்திய உரையடலை நினைவு கூறுங்கள்.
உன்னுடைய ரப்பு வானவர்களை நோக்கி, “நிச்சயமாக நான் பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்.” என்று கூறிய போது, “நாங்கள் உன்னுடைய புகழ் கூறி உன்னைத் துதிப்பவர்களாகவும் இருக்கின்ற நிலையில் அதில் குழப்பம் செய்து இரத்தங்களை ஓடச் செய்பவர்களையா நீ அதில் உண்டாக்கப் போகிறாய்?” என்று அவர்கள் கூறினார்கள். “ நிச்சயமாக நான் நீங்கள் அறியாதவற்றை அறிந்திருக்கிறேன்’’ என்று அவன் கூறினான்.
(திருக்குர்ஆன் 2:30)
உன்னுடைய ரப்பு வானவர்களை நோக்கி, “நிச்சயமாக நான் பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்.” என்று கூறிய போது….
இறைவன் தன் முடிவை வானவர்களிடம் வெளியிட்டான். இறைவனின் கட்டளைகளை நிறைவேற்ற இறைவனால் படைக்கப்பெற்ற மலக்குகளிடம் தன் முடிவை தெரிவிக்க வேண்டிய காரணம் என்ன? இதில் மலக்குகளின் முடிவை அறிவதும், இரண்டாவது கருத்து தேவை என்ற இருநிலைகள் தெரிகிறது.
விளக்கம்.
சாதாரண மனிதர்களான எம்மிடமே தனது கருத்துகளை திருக்குர்ஆன் மூலமாக கூறும் அல்லாஹ், மேலும் அவனது தூதர்கள் மூலம் அவனை நோக்கி பல கேள்விகளை கேட்க்கச்செய்து விளக்கமளித்த அல்லாஹ், மலக்குகளிடம் உரையாடியதில் அதிசயம் ஏதும் இல்லை.
"இன்னும், இப்ராஹீம்; "என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!" எனக் கோரியபோது, அவன், நீர் (இதை) நம்ப வில்லையா?" எனக் கேட்டான்; "மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)" என்று கூறினார்; "(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்;. பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்;. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்" என்று (அல்லாஹ்) கூறினான்."(2:260)
அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களுடன் உரையாடியுள்ளானே தவிர எவ்வாறு உரையாடினான் என்பதைத் தரவில்லை. இது போன்றே ஷைத்தான் மனிதர்களுடன் உரையாடுவதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
எவனொருவன் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான். (17:53)
இங்கு ஷைத்தான் நண்பனாவதன் மூலம் வாயினால் எமது காதுகளுக்கு செய்தியை தருகிறான் என பொருள் கொள்ள முடியாது. உள்ளத்தில் எண்ணங்களைப் போடக்கூடிய சக்தியை அல்லாஹ் குறித்த தவணை வரையும் ஷைத்தானுக்கும் வழங்கியுள்ளான்(7:14-15). மனிதர்களுடனான அவனது படைப்பொன்றின் உரையாடலே இவ்வாறு இருக்கும் போது வல்லமைமிக்கோனின் உரையாடலை எமது கற்பனைக்கு கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை.
02.
ஆனால் மலக்குகளின் கருத்தை இறைவன் ஏற்கவில்லை.
“நாங்கள் உன்னுடைய புகழ் கூறி உன்னைத் துதிப்பவர்களாகவும் இருக்கின்ற நிலையில் அதில் குழப்பம் செய்து இரத்தங்களை ஓடச் செய்பவர்களையா நீ அதில் உண்டாக்கப் போகிறாய்?” என்று அவர்கள் கூறினார்கள்…
இது இறைவனின் முடிவிற்கு ஒரு மாற்று கருத்து. இறைவனின் முடிவை மறுபரிசிலனை செய்ய வைக்கப்படும் வேண்டுகோள். மனிதனை படைப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்ற மலக்குகளின் முடிவு. இதில் அனைத்து மலக்குகளின் முடிவும் ஒன்றே என்பதும் தெளிவாகிறது
விளக்கம்.
இவ்வுரையாடல் மனிதர்களுக்கான சிந்தனைக்காகவும் அத்தாட்சிக்காகவுமே இறைவன் பறைசாற்றியுள்ளானேத் தவிர மலக்குகளிடம் கருத்தைப்பெறுவதற்காக அல்ல. இதனையே இவ்வுரையாடலின் இறுதி வசனம் அடையாளப்படுத்துகிறது.
“ நிச்சயமாக நான் நீங்கள் அறியாதவற்றை அறிந்திருக்கிறேன்’’ (2:30)
மேலும் அவன் எவரிடத்தும் எத்தேவையுமற்றவன் என தனது திருமறையில் பகிரங்கப்படுத்தியுள்ளான்.
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன. நிச்சயமாக, அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன்; புகழப்படுபவன்.( 31:26, )(இன்னும் ஆதாரங்கள்- 39:7/ 57:24/ 64:6/ 112:2) (தொடர்ந்து வரும் விளக்கங்கள் மூலம் இது தெளிவாகும்)
03.
இவர்கள் அனைவரும் ஒரே கருத்தின் கீழ் வந்தது எவ்வாறு? மாற்று கருத்தை முன்மொழிந்தது யார்? மனிதன் தெளிவற்றவன், குழப்பவாதி, போர்க்குணம் கொண்டவன் என்பதே மலக்குகளின் கணிப்பு.
விளக்கம்.
மலக்குகள் என்ற படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வினது கட்டளைகளை நிறைவேற்றும் படைப்பு என்பதால் இக்கேள்விக்கு பதில் தேவையில்லாத ஒன்று. இங்கு உரையாடலின் தன்மை மனிதனது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்பதையே அறிய வேண்டும். அதன் படி உரையாடலின் கருத்துகளை நோக்கும் சக்தியே எமக்கிருக்கிறது. சுய சிந்தனைக்கொடுக்கப்படாத படைப்பு என்ற பின் "மலக்குகளின் கணிப்பு" என்பதற்கே இடமில்லை.
04.
இறைவன், தன்னுடைய பிரதிநிதியாக மனிதனை (ஒருமை) பூமியில் படைக்க இருப்பதாக மட்டுமே இங்கு தெரிவிக்கிறான். குழப்பமும், இரத்தங்களை ஓட்டச் செய்யவும் மனிதர்கள் (பன்மை) தேவை. மேலும் மனிதனின் உடலமைப்பைப்பு, அவனின் திறமை, குணம், செயல்பாடுகள் மற்ற எல்லா விபரங்களும் இறைவனைத் தவிர யாருக்கும் தெரியாது. இங்கு இறைவன் மனிதனைப் படைக்க இருப்பதாக மட்டுமே தெரிவிக்கிறான். இறைவன் மட்டுமே அறிந்த படைப்பின் ரகசியம் மலக்குகளுக்கு தெரிந்தது எப்படி?
வானவர்களுக்கு கிடைத்த ஒரே செய்தி இறைவன், தன்னுடைய பிரதிநிதியாக மனிதனை பூமியில் படைக்க இருக்கிறான் என்ற ஒற்றை வரிச் செய்திமட்டுமே!. ‘இறைவனின் பிரதிநிதி’ என்ற வார்த்தையிலிருந்து இறைவனின் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல், மனிதனை அவன் விருப்பத்திற்கு பூமியை ஆட்சி செய்ய அனுமதி வழங்க இறைவன் முடிவு செய்து விட்டான் என மலக்குகள் உணர்ந்தனர். இறைவனின் ஆட்சி அல்லாமல் வேறு யாருடைய ஆட்சி எங்கு இருந்தாலும் குழப்பம்தான் ஏற்படும் என குறிப்பால் உணர்ந்து மறுப்பு தெரிவித்தனர் என்பதே அறிஞர்களின் வாதம்.
மேலும் ‘இறைவனின் பிரதிநிதி’ என்ற வார்த்தையிலிருந்து மனிதனின் குணத்தைப்பற்றியும் அவனுடைய உடலமைப்பற்றி அதாவது மனிதனுடைய எழும்புகளை சதை மற்றும் தோலால் மூடப்பட்டிருக்கும். அதற்குள் நரம்பு மற்றும் இரத்த ஓட்டங்களும், சுவாச உறுப்புக்கள், ஜீரண, கழிவு நீக்கும் உறுப்புக்களும் சிறப்பாக பகுத்தறிவுடன் கூடிய மூளை உள்ளவனாக இருப்பான் என மலக்குகள் உணர்ந்தனர் என்றால், இறைவன் மனிதனைப் போல இரத்தமும் சதையுமாகவும், குழப்பமான குணமுடையவனாகவும் பொருள் விளங்க நேரிடும். காரணம் அதற்கு முன் மனிதனை யாரும் கண்டதில்லை. அவன் இறைவனின் சிந்தனையில் மட்டுமே இருந்தான்
விளக்கம்.
திருக்குர் ஆன் உங்களது பொழுது போக்குக்காக கதைகள் கூறும் சுவாரசியமான , விரிவான நாவல் அல்ல. அத்தாட்ச்சிகளை அடையாளப்படுத்தி நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிக்கும் வேதம். அதில் மனிதர்களுக்கு தேவையான உரையாடல்களிலும் வரலாறுகளிலும் சிலவே கூறப்பட்டுள்ளன(6:50)( 18:109). அடுத்து கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவைகளே இறைவனும் மலக்குகளும் என்ற அடிப்படையிலேயே இவ்வுரையாடலை நாம் நோக்க வேண்டும் என மீண்டும் கூறுகிறேன். ஒலி (சத்தம்) மூலம் நடைபெற்றதான உங்களது எடுகோள் திருக்குர்ஆனில் இல்லாத ஒன்று. இதனை இவ்வாறு விளங்க முற்படலாம்;
ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்கும் சக்தியை மனிதன் என்ற படைப்பு பெற்றிருப்பது போல் ஒவ்வொரு வார்த்தைகளையும் பார்க்கும் சக்தியை மலக்குகள் என்ற படைப்பு பெற்றிருந்தாலும் ஆச்சரியமொன்றுமில்லை. அல்லாஹ் சர்வ வல்லமையுள்ளவனே என்பதை கூறவே இக்கருத்தை கூறுகிறேனே அவன் எமக்கு தெளிவாக அறிவித்தவைகளைத்தவிர தவிர மலக்குகள் என்ற படைப்பையும் அவர்களது கேட்கும் திறனையும் அல்லாஹ்வைத்தவிர யாரும் அறிய மாட்டார்கள். ஆதலால் கருத்துக்களை கிரகிக்கும் சக்தியையே அல்லாஹ் எமக்குத்தந்துள்ளான். கற்பனைக்கு எட்டாது என அவன் கூறிய படைப்புகளின் பண்புகளை கிரகிக்கும் சக்தி மனிதனுக்கு இல்லை.
மனித ஆன்மாக்கள்(ரூஹ் ) (உங்களது ஒருமை, பன்மை) அனைத்தையும் ஒரே தவணையில் அல்லாஹ் படைத்து விட்டான்(திருக்குர்ஆன்-7:172). அவ்வான்மாக்களுக்கு அல்லாஹ் உருவம் கொடுப்பதே கருவறையில் ஆகும். உருவம் கொடுத்த கருவறையிலும் கூட சுயமாக எமக்கு தீர்மானம் எடுக்கும் சுதந்திரம் இல்லை. மரணத்திற்கு பின்னும் எம்மால் சுயமாக இயங்க முடியாது. ஆக உலகிலுள்ள பிறப்பு முதல் இறப்பு வரையுமான காலமே அவனை சோதிப்பதற்காக சொந்த அறிவினால் தீர்மானம் எடுக்கும் உரிமையை அல்லாஹ் ஏற்படுத்தி தந்துள்ளான்.
05.
மலக்குகளால் தெரிவிக்கப்பட்ட மாற்றுக் கருத்து மலக்குகளின் உள்ளத்தில் உதிக்கச் செய்தவனே எல்லாம் வல்ல இறைவன்தான். மலக்குகள் இதில் கருவி மட்டுமே. இறைவனுடைய படைப்புகளின் ஒவ்வொரு அசைவும் இறைவனின் நாடியவாறு மட்டுமே நிகழ்கிறது அது அவனுக்கு மிக எளிதானதுதான். இறைவனும் திருமறையில் இதை பல இடங்களில் குறிப்பிடுகிறான். இறைவனே ஒரு கருத்தை வெளியிட்டு, அதற்கொரு மாற்று கருத்ததையும் மலக்குகளின் மூலமாக வெளியிட்டுக் கொண்டான் என்று கூறினால் இறைவன் தனக்கு தானே பேசிக் கொள்ளும் தன்மையுடையவன் என்று முடிவு செய்ய நேரிடும்.
ஆதமுக்கு ஸூஜூது செய்ய மலக்குகளிடம் ஆணையிட்ட பொழுது இப்லீஸ் தவிர மற்றவர்கள் அனைவரும் ஸூஜூது செய்தனர். (திருக்குர்ஆன் 7:12)
விளக்கம்.
மிக சிறந்த நிறுவல் இது. இவர் கணித ஆசிரியராக வர வேண்டியவர் பகுத்தறிவாதி போல் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்.
மனிதர்களிடமும் அவன் திருக்குர் ஆன் மூலம் உரையாடுகிறான் என்பதை அவர் உணரத்தவறி விட்டார். சரி இனி அவரது நிறுவலை பகுத்தறிவுடன் பார்ப்போம்.
மனிதனது படைப்பே கணினியாகும். இக்கணினியானது தனியே சுயமாக முடிவெடுக்கத் தெரியாத எமது கட்டளைகளை மட்டுமே கொண்டு செயற்படும் இயந்திரம். அதாவது மனிதன் ஏற்கனவே கொடுத்த நிலையான கட்டளைகளைக் கொண்டு அவ்வப்போது கொடுக்கும் கட்டளைகளை ஏற்று செயற்படுத்துவதே கணினி. இவ்வியந்திரத்தின் முன் இன்று இலட்சக்கணக்கானவர்கள் தவிர்க்க முடியாது முழு நேரமும் அமர்ந்திருக்கின்றனர் என்பதால் "இம்மனிதர்கள் அனைவரும் தமக்குத் தாமே பேசிக்கொள்பவர்கள்" என்ற முடிவுக்கு அறிவுள்ளவர்கள் வருவார்களா? தஜ்ஜால் இதையே கண்டு பிடித்துள்ளார். இது எமது அறிவிற்கு படும் உதாரணம்; அல்லாஹ் அறிவிற்கு அப்பாற்பட்டவன், கற்பனைக்கு எட்டாதவன். இதற்கு மாறாக இவரது ஊகம் இவ்வாறு உள்ளது."அல்லாஹ் வாயினால் கூறினான், மலக்குகள் காதினால் கேட்டு அதனை மூளைக்கு கடத்தி சிந்தித்தார்கள்" என்ற மனிதர்களைப் போன்ற ஒப்பீட்டில் வினவுகிறார்.
06.
மனிதனைப் படைப்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தாலும், இறைவன் ஆணையிட்டதும் மலக்குகள் ஆதமுக்கு ஸூஜூது செய்தனர். மேற்கண்ட இந்தவசனமும் மலக்குகள் மற்றும் ஜின் இனங்களின் பகுத்தறிந்து செயல்படும் தன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.
விளக்கம்.
மலக்குகள் சுயமாக செயற்படும் படைப்புகள் அல்ல, இறை கட்டளைகளை செயற்படுத்த ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். இப்லீஸ் நெருப்பினால் படைக்கப்பட்டவன்(7:12) பகுத்தறிந்து செயற்படக்கூடியவன். ஜின்களும் நெருப்பினால் படைக்கப்பட்டவர்களே
07.
முன்பு வாதிட்ட முறையைப் போல இறைவனின் விருப்பத்தின் அடிப்படையில்தான் ஒவ்வொரு நிகழ்வும் நடைபெறுகிறது வாதிட்டால், மலக்குகள் வழிபடும் இயந்திரம் என பொருள் விளங்க நேரிடும், அவர்களின் தூய்மை பொருளற்று வேடிக்கையாகி விடும்.
விளக்கம்.
நிச்சயமாக மலக்குகள் இறைவனது கட்டளைகளை நிறைவேற்ற மாத்திரமே படைக்கப்பட்ட படைப்புகளே தவிர வேறில்லை.
அவர்களை தூய்மை படுத்தி வணங்கும் புதிய வழிகேடுகளை இஸ்லாத்தில் நீங்கள் புகுத்த வேண்டிய அவசியமுமில்லை. மலக்குகளை விட உயர்ந்த அந்தஸ்த்தில் அறிவை கொடுத்து மனிதனை அவனது பிரதி நிதியாக படைத்திருப்பதாகவே அல்லாஹ் கூறுகிறான். அதனாலேயே அவனுக்கு சுஜூது செய்யுமாறு (சிரம் தாழ்த்துமாறு ) மலக்குகள் பணிக்கப்படுகின்றார்கள்.
08.
இப்லீஸ் தற்பெருமை கூறி இறைவனின் ஆணையை ஏற்கவில்லை என்று குறை கூறுவது இறைவன் தன்னைதானே குறை கூறியதாக பொருள் தானாக வரும்.
விளக்கம்.
05 வது மற்றும் 06வது விடைகளே இதற்கும் பொருந்தும்.
09.
…“ நிச்சயமாக நான் நீங்கள் அறியாதவற்றை அறிந்திருக்கிறேன்” என்று அவன் கூறினான்.
… நிச்சயமாக நான் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பதை அறிவேன்; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துகிறதையும் மறைத்துக்கொள்கிறதையும் அறிவேன் என்று உங்களுக்கு நான் செல்லவில்லையா? என்று அவன் கூறினான். மலக்குகளின் மாற்றுக் கருத்திற்கு இறைவனின் பதில். இந்த மறுமொழியால், மலக்குகளின் கருத்து அவர்களுடைய பகுத்தறிவால் கூறப்பட்டுள்ளது என உறுதியாக சொல்லலாம். இறைவனும் மலக்குகளின் பதிலை மறுக்கவில்லை.
எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த உரையாடல்கள் நிகழ்ந்தது என்று மனிதனுக்கு தெரியாது. ஆனால் கடந்த காலங்களில் நிகழ்ந்த போர்களும், அநீதிகளும், படுகொலைகளும், கலவரங்களும் இன்றும் தீவிரமாக தொடர்கிறது இது நாளை இன்னும் தீவிரமாகவும் கொடூரமாகவும் தொடரும் என்பது எல்லோரும் மிகத் தெளிவாக உணர்ந்த உண்மை.எனவே மலக்குளின் கூற்று மிக மிகச் சரியானது. மலக்குளின் கணிப்பு சிறிதளவும் தவறவில்லை.
விளக்கம்.
இதற்கு அறிமுகப்ப்ந்தியும் 04, 05, 06, 07 வது விடைகளே இதற்கும் பொருந்தும்.
10.
இறைவனின் படைப்பினங்களின் சிந்தனையில் உருவாகும் கருத்துக்களுக்கும், செயல்களுக்கும் இறைவன் காரணமாக இருக்க முடியாது என்பதை கீழ்வரும் வசனமும் உறுதி செய்கிறது
இன்னும் நிச்சயமாக மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்களென நிச்சயமாக நாம் எண்ணியிருந்தோம்.(திருக்குர்ஆன் 29:5)
விளக்கம்.
மேற்கோளிடப்பட்டுள்ள திருக்குர்ஆன் அத்தியாயம் பிழையாயானதாகும். அல்குர்னில் ஜின்கள் (72) என்ற அத்தியாயத்தில் 1 முதல் 15 வரையுமான வசனங்கள் ஒரு "ஜின்" கூறிய வசனங்களாகும். அதில் 5 வது வசனமே (72:5) உங்களது மேற்கோளிளுள்ளது . இக்கூற்று அல்லாஹ்வினுடையதல்ல குறித்த ஜின்னுடையதாகும்.
11.
நாளை நிகழ்வதை இறைவனைத் தவிர யாருக்கும் தெரியாது, விதியை நிர்மானிப்பவனும் செயல்படுத்துபவனும் இறைவனே!. இறைவன் முன்பே தீர்மானித்ததைப்போல ஒவ்வொரு நிகழ்வும் நிறைவடைகிறது என்ற கருத்து கேள்விக்குறியாகிறது. விதி இருப்பது உண்மை என்றால் விதியை முடிவு செய்பவர் யார்?
விளக்கம்.
கீழுள்ள இறைவாக்கு ஒன்றே போதும் என நினைக்கிறேன். இவ்வாக்குடன் பிறப்பு முதல் இன்றுவரையும் உங்களது கையில் சேகரித்து வைத்துள்ள இஸ்லாம் மீதான அனைத்து குதர்க்க கேள்விகளையும் ஒப்பிட்டு பாருங்கள் தெளிவு பெறுவீர்கள்.
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இதுவே அல்லாஹ் உலகிற்கு ஏற்படுத்தித் தந்துள்ள விதியாகும்). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால்தான் (, உனக்குத் தரப்பட்டுள்ள தீர்மானிக்கும் அறிவு குறை பாட்டால்தான் ) வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம் - அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(4:79)
12.
இறைவன் ஆதாமிடம் கூறியதை நினைவு கூறுங்கள்,
“சுவர்கத்தில் உங்கள் விருப்பம் போல இருங்கள் ஆனால் அந்த தடுக்கப் பட்ட மரத்தை நெருங்காதீர்கள் மீறினால் சபிக்கப்ட்டவராவீர். ”
( அல் குர் ஆன் 2:35, 7:19-28, 20:120-123)
“நீர் பசியில்லாதிருப்பதும், நிர்வாணமாகது இருப்பதும் இதில் உண்டு.”
“இதில் நிச்சயமாக நீர் தகிக்கவும் மாட்டீர், வெயிலில் படவுமாட்டீர்.”
சைத்தான் அவருக்கு மனதில் ஊச்சாட்டத்தை உண்டாக்கினான்; ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிந்துவிடாத ஆட்சியையும் உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று அவன் கேட்டான்.(திருக்குர்ஆன் 20.118-120)
இப்லீஸ்ன் மோசடியால் மீறினர், விளைவு தங்ளுடைய வெட்கத்தலங்கள் வெளியாயின. விளைவு காமம் மற்றும் அதனால் ஏற்பட்ட மனிதர்களின் பெருக்கம், குழப்பம்..
விளக்கம்.
"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர். (20:118)
மறைக்கப்பட்டிருப்பீர் என்பதன் ஒத்த கருத்தை தருவதே நிர்வாணமாக இருக்கமாட்டீர் என்பதாகும். அல்லது நிர்வாணம் என்ற வார்த்தையே தேவையற்ற ஒன்று. இருந்தும் உங்களது குறையறிவை நான் முழுதும் அறிந்தவன் என்பதால் மிக தெளிவான ஆதாரமுள்ள வசனத்தை உங்களது இறுதி கேள்வியில் பார்வைக்குத் தருகிறேன்.
13.
மனிதனை மிக அழகான வடிவமைப்பில் திட்டமாக நாம் படைத்தோம்.
பிறகு அவனைக் கீழானவர்களிலும் மிக கீழானவனாய் நாம் ஆக்கினோம்.
(திருக்குர்ஆன் 94: 4, 5)
இன்று மனிதனின் இழிவான வாழ்க்கைக்கு யார் காரணம்? இப்லீஸின் மோசடியா? அல்லது இறைவனின் விருப்பமா? இந்த செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. இறைவனின் விருப்பம் மனிதர்களை பூமியில் படைப்பது மேற்கண்ட வசனம் அதை உறுதி செய்கிறது. ஆதாம் தடுக்கப்பட்ட பழத்தை சுவைக்கவில்லை என்றாலும் மனிதர்களை பூமியில் படைப்பதை உறுதி செய்கிறது. பிறகு ஏன் ஆதாம் தண்டிக்கப்பட வேண்டும்?
விளக்கம்.
காரணங்களைக்கொண்டே காரியங்கள் ஆகும் என்பதை தெளிவாக அவன் காட்டித்தந்துள்ளான். இங்கு இப்லீஸ் எனும் படைப்பை காரணமாக்கி இறைவன் அவனது நாட்டத்தை நிறைவேற்ற பயன்படுத்துகிறான்.
பின்னர், இப்லீஸுக்கு மனிதர்களை வழிகெடுப்பதற்கான அனுமதியையும் வழங்குகிறான்(குர்ஆன்-7:14); வழி கெடாதிருப்பதற்கான நேர்வழியையும் தனது தூதர்கள் மூலம் வழங்கியிருக்கின்றான். மனிதனுக்கு சுயமாக தீர்மானமெடுத்து செயற்படும் அறிவையும் வழங்கியிருக்கின்றான். இவ்வறிவு மூலம் அவன் இப்லீஸின் வழிகாட்டலையும் பின் பற்றலாம் அல்லாஹ்வின் நேர்வழி காட்டலையும் பின் பற்றலாம் அவனது ஒவ்வொரு முயற்சிக்குமான சாதக பாதக பலனை இவ்வுலகில் அனுபவிப்பான். மறுமையிலும் முடிவில்லாத சாதக பாதக பலனை அனுபவிப்பான். ஆக சொந்த அறிவை பயன்படுத்துவதே இவ்வுலகில் மனிதர்களுக்கான சோதனையாகும். இதற்கான காரணத்தை அல்லாஹ்விடம் கேட்க முடியாது அவனே கூறிவிட்டான்.
“ நிச்சயமாக நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்திருக்கிறேன்’’ (குர்ஆன்-2:30)
எம்முன் உள்ள கடமை அவனது இருப்பை உறுதிசெய்வதே.
14.
மது அருந்தினால் போதை உண்டாகும், அறிவு அழிந்து போகும் எனவே மது தடை செய்ப்பட்டது. மதுவினால் போதை ஏற்படவில்லை என்றால் அது ஒரு சாதரண திரவம்தான். எனவே தடை மதுவின் மீதல்ல அனைத்து வகையான போதையின் மீது. தடுக்கப்பட்ட பழத்தை சுவைத்ததால் ஆதாம் பெற்றது பாலியல் உணர்ச்சியை. எனவே பாலியல் உணர்ச்சியை பெற்றதால் சுவர்கத்திலிருந்து வெளியேற்றம். தடுக்கப்பட்ட பழத்தை சுவைத்ததால்தான் பாலியல் உணர்ச்சி ஏற்பட்டது என எங்கும் கூறப்படவில்லை என்று மறுக்க வேண்டாம். வெட்கத்தலங்களை அறிந்தனர் என்று இறைவன் கூறுவதன் பொருள் என்ன? எனவே இன்று வரை நாம் மேற் கொள்ளும் மணவாழ்க்கை எப்படி சரியாகும்?
விளக்கம்.
அறிந்தனர் என்பதல்ல வெளிப்பட்டது என்பதே குர்ஆன்நடை. அதாவது ஏதோ வடிவில் மறைக்கப்பட்டிருந்தவைகள் வெளியாயின. இதைத்திருக்குகுர்ஆன் தெளிவாக கூறியுள்ளது.
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.(குர்ஆன்-7:27)
No comments:
Post a Comment